உடுக்கை அடித்து ஊராட்சி தலைவர்கள் போராட்டம்
தமிழகத்தில் கிராம ஊராட்சி மன்றங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகியும் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாகக் கிராமத்தில் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் கிராம ஊராட்சி தலைவர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் செய்ய முடியாமல் திண்டாடி வருகிறோம். இது தொடர்பாக அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பது ஊராட்சி மன்ற தலைவர்களின் குற்றச்சாட்டு.
எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக உடுக்கை அடித்துக் குறி சொல்வது போன்ற நூதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர் ஊராட்சிமன்ற தலைவர்கள் சிலர். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி ஒன்றியம் பள்ளவ சேரி ஊராட்சிமன்ற தலைவர் கோகிலாவின் கணவர் ராஜேந்திரன் கோடாங்கி உடுக்கை அடித்து ஒரு காணொளியைப் பதிவு செய்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி வைரலாகி வருகிறது .
உடுக்கை அடிக்கும் நபரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்எப்போ சாமி அரசின் நிதி வரும் ? என்று கேட்கப் பழனியும் சாமியும் நன்றாகத் தான் இருக்கிறார்கள். வேலும் மணியும் தான் சரியில்லை என்று கோடாங்கி பதில் சொல்கிறார். இப்படி ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் வேதனையை நகைச்சுவையோடு கோடாங்கி உடுக்கை அடித்துச் சொல்லும் இந்த காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது