12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் உயிர் போராட்டம்.. நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர்

டெல்லி: அந்த 12 நாட்களும் என் மகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் மரணத்தை எதிர்த்து போராடினால் என நிர்பயா தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கடந்த 2012‌-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி (இன்றைய தேதி) தலைநகர் டெல்லியில் இரவு‌ நேரத்தில் ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 1‌3 நாட்களிலேயே மாணவி நிர்பயா உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 8 வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார் ஆகியோருக்கு பல்லேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட 9 மாதங்களுக்குப் பிறகு நிர்பயாவின் தாய் ஆஷா தேவி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஆஷா தேவி அளித்த பேட்டியில், இந்திய வரலாற்றில் முதல்முறையாக நான்கு கொடூர குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர் இது முதல் டிசம்பர் 16. நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது. என் மகள் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது என்பதனால் நான் மவுனமாக உட்கார்ந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம். பாலியல் வன்கொடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்றார்.

அதன்மூலம் நான் என் மகளுக்கு அஞ்சலி செலுத்துவேன். பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நிர்பயா தனது கடைசி காலகட்டங்களில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சுமார் 10-12 நாட்கள் உயிருக்கு போராடிய நாட்களையும் வேதனையுடன் ஆஷா தேவி தெரிவித்தார். அந்த 12 நாட்களும் என் மகள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் மரணத்தை எதிர்த்து போராடினாள். அவரின் போராட்டத்தை பார்த்த அந்த வலியை உணர்ந்த அந்த நொடி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவேன், நீதிக்காக போராடுவேன் என்று சபதம் எடுத்தேன். இப்போது எனது மகள் நிர்பயாவை ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொருவரின் முகத்திலும் பார்த்து வருகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

More News >>