கூகுள் மீட் செயலி: மேலும் 4 மொழிகளில் லைவ் கேப்ஷன் வசதி
கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நாள்தோறும் கூகுள் மீட் செயலியை புதிதாக 20 லட்சம் பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்து வரும் நிலையில் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் கேப்ஷன் என்னும் துணை தலைப்புகள் வசதியை கூகுள் மீட் அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில மொழியில் இந்த வசதி கடந்த ஆண்டே வந்துவிட்டது. மெய்நிகர் சந்திப்புகளில் பங்குபெறும் செவித்திறன் இல்லாதவர்கள் மற்றும் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் என்ற வசதி கூகுள் மீட் செயலியில் பயன்படுத்தப்படுகிறது.
பேசப்படும் சொற்றொடர்கள் வரி வடிவில் மாற்றப்பட்டு காண்பிக்கப்படும். ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள இந்த வசதி, தற்போது மேலும் 4 மொழிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. கூகுள் மீட்டின் கேப்ஷன் அமைப்பில் 'ஸ்டிக்கி' (sticky) என்ற வசதி உள்ளது. அதன்படி பயனர்கள், தங்கள் மொழி உள்ளிட்ட தங்கள் தெரிவை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதன்படி பின்வரும் சந்திப்புகளில் பயனரின் தெரிவின்படி வரி வடிவம் காண்பிக்கப்படும்.