போராட்டத்தை நசுக்க முயற்சிப்பதா? மத்திய அமைச்சருக்கு விவசாயச் சங்கம் கடிதம்..
விவசாயிகள் போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத்தினர், மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. அவர்களின் போராட்டம் 22வது நாளாகத் தொடர்கிறது.சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தை அரசியலாக்கி ஒடுக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு பிடிவாதம் செய்கிறது.
ஆனால், நாங்கள் மத்திய அரசை பணிய வைப்போம். சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், சம்யுக்த் கிஷான் யூனியன் என்ற முக்கிய சங்கத்தினர், வேளாண் அமைச்சர் தோமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், போராட்டத்தை நசுக்குவதற்காகப் போராடாத விவசாயச் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரித்துத் தனிமைப்படுத்தி, போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். சட்டங்களில் எந்த திருத்தத்தையும் ஏற்க மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். எனவே, திசை திருப்பும் முயற்சிகளைக் கைவிட்டு அதில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.