விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தற்கொலை.. கடிதத்தில் எழுதிய காரணம்..
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மத குரு பாபா ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார். இது விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு போராட்டம் நீடித்து வருகிறது.இந்நிலையில், டெல்லி-சோனிபட் எல்லையில் கண்ட்லி பகுதியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய குரு பாபா ராம்சிங் நேற்று(டிச.16) பங்கேற்றார்.
அவர் ஹரியானாவில் உள்ள குருத்வாரா ஒன்றின் குருமார். போராட்டத்தில் பங்கேற்ற பாபா ராம்சிங் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கடிதத்தில், தங்கள் உரிமைக்காகப் போராடும் விவசாயிகளின் வலியை உணர்கிறேன். மத்திய அரசு அவர்களுக்கு நீதி வழங்கத் தவறி விட்டது. விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுக் கொள்கிறேன். விவசாயிகளுக்காகச் சிலர் தாங்கள் பெற்ற விருதுகளை சமர்பித்திருக்கிறார்கள். நான் எனது இன்னுயிரை தியாகம் செய்கிறேன் என்று பாபா ராம்சிங் எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட சில முதிய விவசாயிகள் குளிர்தாங்காமல் இறந்த நிலையில், இந்தச் சம்பவம் ஹரியானா, பஞ்சாப் விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள விவசாயச் சங்கத்தினர், மத்திய அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறியுள்ளது. அது தொடர்பான வழக்கு இன்று(டிச.17) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.