சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்கலாம் கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 15ம் தேதி திறக்கப்பட்டது. வழக்கமாக மண்டலக் கால பூஜைகளுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இந்த வருடம் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கக் கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி வார நாட்களில் 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஆனாலும் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இந்நிலையில் சபரிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களுக்கு கொரோனா பரவுவது அதிகரித்து வந்தது. கடந்த 1 மாதத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து தற்போதைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைந்ததால் இவ்வருடம் சபரிமலை கோவில் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது. வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளின் போது தினமும் சராசரியாக 3.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது தினமும் 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது. இது சபரிமலை கோவில் நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதித்தது.
தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோவில் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே டிசம்பர் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனைக்குப் பதிலாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.