சிம்புவிற்கு எழுதிய கதையில் விஜய் நடிக்கிறாரா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. பின்னர் அதைப் பட நிறுவனம் மறுத்தது. மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. வரும் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய்யின் அடுத்த படத்தை இயக்க பல இயக்குநர்களின் பெயர்கள் வெளிவந்தன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படம் உருவாகும் என்று பேச்சு நிலவியது. ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாட்டால் முருகதாஸ் அப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் விஜய் நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் 'தளபதி 65' குறித்த அதிகாரப்பூர்வ இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், நெல்சன் தனது கைவிடப்பட்ட திரைப் படக் கதையை 'தளபதி 65' படத்திற்காகப் புதுப்பித்துள்ளார் என்று நெட்டில் தகவல் பரவுகிறது. சிம்பு நடித்த 'வேட்டை மன்னன்' படத்தின் கதையில் நெல்சன் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படம் தான் நெல்சன் திலீப்குமாருக்கு அறிமுகமாகப் படமாக இருந்திருக்கும், ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே அப்படத்தின் படப் பிடிப்பு நிறுத்தப்பட்டது.அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் அறிமுகமானார் நெல்சன். அப்படம் வரவேற்பைப் பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தை இயக்கி உள்ளார்.
சிம்பு கைவிட்ட வேட்டை மன்னன் ஸ்கிர்ப்ட் விஜய்க்கு ஏற்ப மாற்றப்பட்டதால் இதில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி இயக்குனர் தரப்பு எதையும் உறுதி செய்யவில்லை. முன்னதாக, ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்குவதாக இருந்து அதிலிருந்து இயக்குனர் விலகியதை அடுத்து மகிழ் திருமேனி, சசிகுமார், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதை கேட்டு எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அட்லீ மீண்டும் விஜய் படத்தை இயக்கலாம் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அவர் இந்தியில், ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஜனவரி மாதம் இதன் படப் பிடிப்பு தொடங்க உள்ளது.