மோடிஜி போல் இருக்காதீங்க.. ஆம் ஆத்மி கிண்டல் வீடியோ..

ஆம் ஆத்மி கட்சி தனது இணையதளத்தில் பிரதமர் மோடியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்திருக்கிறது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த முறை கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இம்முறை ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டார். இன்னும் சொல்லப் போனால், அவரை பாஜகவின் பி டீம் ஆகிவிட்டதாக காங்கிரஸ் கிண்டலடித்து வருகிறது. ஆனாலும், பிரதமரையும், மத்திய அரசையும் அவ்வப்போது ஆம் ஆத்மி கட்சி விமர்சித்து வருகிறது. இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் ஸ்டால்களை பிரதமர் மோடி பார்வையிடும் காட்சி ஓடுகிறது. முகக்கவசம் அணியாமல் வந்த பிரதமரிடம் ஒரு கடையில் இருந்த விற்பனை பெண்மணி, ஒரு முகக்கவசத்தை எடுத்து கொடுக்கிறார். ஆனால், அதை வேண்டாம் என்று பிரதமர் மோடி மறுத்து விட்டு நகர்கிறார். இந்த வீடியோவை பதிவிட்டு, முகக் கவசம் அணியுங்கள். மோடிஜியை போல் இருக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இப்படி எல்லா பிரபலங்களையும் ட்ரோல் செய்வது சாதாரண விஷயம்தான். ஆனாலும், ஆம் ஆத்மி கட்சி கிண்டல் செய்திருப்பதுதான் செய்தி.

More News >>