டெஸ்டில் கோஹ்லி டாஸ் வென்றால் தோல்வி கிடையாது... இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடருமா?
டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி டாஸ் வென்றால் பெரும்பாலும் அந்தப் போட்டியில் வெற்றி உறுதி என்று தான் இதுவரை உள்ள கணக்குகள் தெரிவிக்கின்றன. இன்றைய ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் டாசை வென்றார். எனவே இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர் முடிவடைந்து விட்டது.
ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், டி20 போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளன. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. மேலும் இன்றைய போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மாயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இருவரும் மிக வேகமாக ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமலும், மாயங்க் அகர்வால் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் பூஜாராவும், விராட் கோஹ்லியும் இணைந்தனர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடினர். இந்நிலையில் பூஜாரா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோஹ்லியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். கோஹ்லி அரைசதம் அடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டன் கோஹ்லியின் முந்தைய சரித்திரம் குறித்துத் தான் இப்போது ரசிகர்கள் தற்போது பரபரப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி டாஸ் வென்ற எந்த போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது கிடையாது. இது ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எடுத்த கணக்கல்ல. இதுவரை கோஹ்லி 25 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றுள்ளார். அதில் 21 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 4 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது. இந்திய மண்ணில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் இதே சாதனை தொடர்கிறது. வெளிநாடுகளில் இதுவரை கோஹ்லி 10 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றுள்ளார்.
இதில் 8 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமநிலையில் முடிந்தன. இதனால் இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் கோஹ்லி டாஸ் வென்றுள்ளதால் இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதே சமயத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் ஒரு சாதனையை முறியடிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சரித்திரத்தில் இதுவரை 14 பகல்-இரவு ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 7 போட்டிகளில் ஆஸ்திரேலியா கலந்து கொண்டுள்ளது.
அந்த 7 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் சாதனை தொடரும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்க வேண்டும். இதுவரை இந்தியா ஒரேயொரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. அந்தப் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா தோற்கடித்தது.