மதுரை ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய பணிகள் மார்ச் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சீரமைக்க 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018ல் 18 மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என மதுரை மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் முடிய உள்ள நிலையில், இதுவரை பெரியார் பேருந்து நிலையம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்காலிக பேருந்து நிலைய பகுதியில் போதுமான கழிவறை, குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும், நீதிமன்றத்தில் அளித்த உறுதியின் அடிப்படையில் விரைவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தைக் கட்டி முடிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், 40 முதல் 42 சதவீத மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மாநகராட்சி தரப்பில், வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து நீதிபதிகள் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.