பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் காலி.. விமர்சித்த எடப்பாடி, பாட்டில் பதிலடி கொடுத்த கமல்!

குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள இறையுமன்துறையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தற்போது அந்த தேவை வந்துள்ளது. திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் ஊகம் தான்.

யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளது மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம். நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் சந்தோசமாக ஏற்கிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்தான்" என்றவர் எம்ஜிஆர் குறித்தும் பேசினார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இன்று பேசிய முதல்வர் எடப்பாடி, ``எம்ஜிஆர் வேடம் போட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்று கமலே ஒப்புக்கொண்டுள்ளார். எம்ஜிஆர் எவ்வளவு நல்ல கருத்துகளை தனது படங்கள் மூலம் சொன்னார். ஆனால் கமல்ஹாசன் அப்படியா செய்தார்? அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தாலே அந்த குடும்பம் காலி. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள்" என்றார்.

இதற்கு முதலில் பதில் கொடுத்த கமல், ``முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றவர், முதல்வரின் விமர்சனத்துக்கு எம்ஜிஆர் பாடல் மூலம் பதிலடி கொடுத்தார். ```சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'" என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>