கைலாசா எங்கே இருக்கிறது.. விசிட் அடிக்க வேண்டுமா.. நித்தி கொடுத்த செம ஆபர்!
ஊர், உலகமே கொரோனா பீதியில் உறைந்துகிடக்க சாமியார் நித்யானந்தாவோ தனது சேட்டைகளை கொஞ்சம் கூட குறைக்கவில்லை. கடந்த வாரம் கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிடப் போவதாகவும், ரிசர்வ் வங்கியை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்த நித்தி, இப்போது செய்தும் காட்டியிருக்கிறார்.விநாயகர் சதுர்த்தியன்று கால் காசு முதல் பத்து காசு வரையான தங்க நாணயங்கள் வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கிறார்.
உள்நாட்டு புழக்கத்துக்கு என்று ஒரு தனி நாணயமும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு என்று வேறொரு தனி நாணயமும் அறிமுகப்படுத்தி, 'இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி' என்று கைலாசாவின் வங்கிக்கு பெயரும் அறிவித்துள்ளார். மேலும் வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேறு ஒரு நாட்டுடன் தனது நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று தனது சத்சங்க நிகழ்வின்போது கைலாசாவுக்கு 3 நாட்கள் விசாவில் வர விண்ணப்பிக்கலாம் என்று கூறிய நித்தி, அதற்கு எப்படி வர வேண்டும் என்ற விவரங்களை வெளியிட்டிருக்கிறார் நித்தியானந்தா. ``முதலில் ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அங்கிருந்து கைலாசாவுக்கு வர கைலாசா தனியார் விமான சேவை உள்ளது. 3 நாட்களுக்கு மேல் கைலாசாவுக்கு விசா கோரி விண்ணப்பிக்க வேண்டாம். விசா வேண்டும் என்பவர்கள் இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இங்கு வர எவ்வித செலவும் தேவையும் இல்லை. ஆஸ்திரேலியா வரை மட்டுமே நீங்கள் சொந்த செலவில் வர வேண்டி இருக்கும். ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு வர விமான செலவு, தங்குமிடம், உணவுச்செலவு எதுவும் கிடையாது. அனைத்தும் கைலாஸாவில் இலவசம்" எனக் கூறியுள்ளார்.