இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை எட்டுகிறது..
இந்தியாவில் இது வரை 99 லட்சத்து, 77,834 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலக நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்நோய்த் தொற்று கடந்த சில மாதங்களுக்கு முன் வேகமாகப் பரவியது. தற்போது நோய் பரவல் குறைந்து வருகிறது. எனினும், தினமும் 20 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் இது வரை 99 லட்சத்து 77,834 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 10,332 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணம் அடைந்து விட்டனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புதிய நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.17) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1174 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 3516 ஆக உயர்ந்தது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1214 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 81,745 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,942 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9829 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 340 பேருக்கும், கோவையில் 120 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேர், செங்கல்பட்டு 76 பேர், சேலம் 58 பேர், திருப்பூர் 50 பேர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 47 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் நேற்று 40க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கும், கோவையில் 50 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 40 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.