அவென்சர் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்.. மீண்டும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம்..
நடிகர் தனுஷின் திரையுலக வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெரிய வெற்றியை ஈட்டினார். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று அப்போது சிலர் அவரை விமர்சனம் செய்தனர். ஆனால் அவர் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தனது பாணியில் தொடர்ந்து நடித்தார்.
அவர் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதுடன் பிரபல நடிகர்கள் கூட சாதிக்க முடியாத விஷயங்களைச் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் வரிசையாக பல ஹிட் படங்களை அளித்து வரும் தனுஷ் கடந்த 2013ம் ஆண்டு ராஞ்சனா படம் மூலம் இந்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். அதன்பிறகு 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜெர்னி ஆஃப் தி ஃபக்ரி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார்.
தற்போது மீண்டும் அட்ராங்கிரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதையெல்லாம் கடந்து தற்போது அவென்சர் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் படங்களை இயக்கிய ரூஸ்ஸோ பிரதர்ஸ் (அந்தோனி ரூஸோ-ஜோ ரூஸோ) இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தனுஷ். தி கிரே மேன் என்று இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ரெயன் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ் நடிக்கின்றனர். நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தி கிரே மேன் படத்தில் நார்கோ நடிகர் வங்கர் மவுராம் செர்ஜியோ நடிகை அன டி அர்மாஸ் மற்றும் ஜெசிக்கா ஹென்விக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷ் மொத்தம் 45 நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதுபற்றி மற்ற விவரங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம் படத்தை கார்த்தி சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அடுத்து மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கதையாக இது உருவாகி வருகிறது. இப்படத்துக்குக் கர்ணன் என்று டைட்டில் வைத்ததற்குச் சிவாஜி சமூக நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிவாஜி நடித்து அந்த காலத்தில் வெளியான இப்படம் தமிழில் மறக்க முடியாத படம். எனவே கர்ணன் டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று சமீபத்தில் தனுஷுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.