திருப்பதி கோவிலில் உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே ஏகாதசி இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்காகத் திருப்பதி சுற்றுப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவிப்பு.தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள்.திருப்பதியில் கோவில் செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது : வரும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்குச் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இப்படி பத்து நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அரசு பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு 25ஆம் தேதி காலை 3 மணிக்கு வைகுண்ட க்யூ காம்பளக்ஸ் வரிசை மூலம் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் மட்டும் அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் 5 பேர் உள்பட 6 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இதர முக்கிய பிரமுகர்கள் 4 பேருக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு 25ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை தரிசன அனுமதி இல்லை. அதன்பிறகு குறைந்த அளவில் மட்டும் அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்குச் சிறப்புத் தரிசனத்திற்காக 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்டுகளும் மற்ற நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதர அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்று ஆன்லைனில் பங்கேற்ற பக்தர்கள் 25, 26 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாது. மற்ற நாட்களில் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இலவச தரிசனத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏற்கனவே மற்ற மாநில, மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதால் உள்ளூர் பக்தர்களுக்காகத் திருப்பதியில் ஐந்து இடங்களில் ஒவ்வொரு மையத்திலும் 10 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என வழங்கப்பட உள்ளது. இந்த கவுண்ட்டர்களில் திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகளைத் தவிர மற்றவர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.