குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : குளிக்க தடை
தொடர் மழை காரணமாகக் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயினருவியில் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எட்டரை மாதங்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அருவிகளில் நீராட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்றிரவு தென்காசி குற்றாலம் செங்கோட்டைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாகக் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மெயினருவியில் பிரதான வளைவைத் தாண்டி தண்ணீர் உள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அருவியில் தண்ணீரின் அளவு குறைந்தால் தான் அங்கு மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அருவியில் நீராட ஆவலுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதே சமயம் பழைய குற்றால அருவி ஐந்தருவி புலியருவி ஆகியவற்றில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படவில்லை.