வணிக வளாகத்தில் பிரபல நடிகையிடம் சில்மிஷம்... 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள இளம் நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை நடந்தது.மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் காரில் திருச்சூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் ஒரு கும்பல் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகப் பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பிரபல மலையாள இளம் நடிகையிடம் நேற்று கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிய ஒரு மலையாள படத்தின் நாயகியான இவர், நேற்று மாலை தன்னுடைய தங்கையுடன் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்குச் சென்றார். அங்கு உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் அவர் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.அவரது தங்கை சற்று தொலைவில் வேறு பொருளை வாங்கிக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் அந்த நடிகையின் அருகே வந்த 2 வாலிபர்கள் நடிகையின் உடலைத் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த நடிகை கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து மாயமாகி விட்டனர். இந்த சம்பவத்தைப் பார்த்த நடிகையின் தங்கை உடனே அருகில் சென்று அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். இதன் பின்னர் இருவரும் அங்கிருந்து உடனடியாக சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட நடிகை தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ளார். வணிக வளாகத்தில் வைத்து 2 வாலிபர்களும் என்னிடம் சில்மிஷம் செய்த போது உடனடியாக என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நிமிட நேரத்தில் இருவரும் அங்கிருந்து மாயமாகி விட்டனர். இது எனக்கு பெரும் அவமானமாக இருந்தது. அந்த சமயத்தில் அவர்களை என்னால் எதுவும் செய்ய முடியாதது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. இது போன்ற ஆட்கள் இருப்பதால் தான் பெண்களால் பொது இடங்களில் நிம்மதியாகச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இது குறித்து போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து கொச்சி களமசேரி போலீசுக்குத் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட நடிகை புகார் கொடுக்காவிட்டாலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். சம்பவம் நடந்த வணிக வளாகத்திற்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு படக்கருவியைப் பரிசோதித்த பின்னர் சம்பவம் உண்மையாக இருந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று களமசேரி போலீசார் தெரிவித்தனர். பிரபல மலையாள நடிகையிடம் கொச்சி வணிக வளாகத்தில் இரண்டு வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.