பரபரப்பான ஆட்டத்தில் பிராவோ அதிரடியால் சி.எஸ்.கே. த்ரில் வெற்றி
டுவைன் பிராவோவின் அதிரடியான அரைச் சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2018 சீசனின் முதல் லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்குவதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதேபோல் நடப்பு சாம்பியன் என்ற மகுடத்துடன் மும்பை அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக ரோஹித் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள பெரிதும் சிரமப்பட்டார். ஆரமபம் முதலே அடித்த ஆட முயற்சித்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை.
இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ரன் ஏதும் இல்லாமல் தீபர் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால், முதல் மூன்று ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்தது. மேலும், வாட்சன் வீசிய நான்காவது ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் இணை அணியை தூக்கி நிறுத்தியது. அணியின் எண்ணிக்கை 98 ஆக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஆட்டத்தின் 15ஆவது ஓவரில் இஷன் கிஷன் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 113ஆக இருந்தது
அதன்பின், சகோதர்களான கருணல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஹர்த்திக் பாண்டியா ரன் அடிக்க திணறிய அதே சமயத்தில் கருணல் பாண்டியாவின் ஆட்டத்தில் அணல் பறந்தது. கடைசி வரை களத்தில் இருந்த கருணல் பாண்டியா 22 பந்துகளில் 41 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 20 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.
இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் டுவைன் பிராவோ சிறப்பாக பந்து வீசினார். தான் வீசிய முதல் ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், அடுத்த ஓவர்களில் முறையே 4, 3, 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில் சென்னை அணி சொதப்பியது. ஷேட் வாட்சன் அடித்து ஆட ஆரம்பித்ததுமே, அவுட்டானர். ஹர்த்திக் பாண்டியா வீசிய ஓவரில் முதலில் ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸருக்கு முயற்சிக்க அது கேட்ச் ஆனது.
அதன் பின்னர் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் ஹர்த்திக் பாண்டியா பந்திலேயே அவுட்டானர். மறுபுறம் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே பந்தில் 22 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் வெளியேறினார்.
அதன் பின் தோனி களமிறங்க மைதானமே அவரது அதிரடியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க தோனியோ 5 அதே மயங்க் மார்கண்டே பந்தில் 22 ரன்களில் அதே எல்.பி.டபள்யூ முறையில் வெளியேற மைதானமே அமைதியானது. இதற்கிடையில் கேதர் ஜாதவ் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
அடுத்து வந்த தீபக் சாஹர் முதல் பந்திலேயே மயங்க் மார்கண்டே பந்தை இறங்கி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். சென்னை அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ஓவர்களுக்கு 82 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
ஆனால், தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஹர்பஜன் சிங் 8 ரன்களிலும், மார்க் வுட் 1 ரன்னிலும் வெளியேற சென்னை அணி 16.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது 21 பந்துகளில் 48 ரன்கள் தேவையாக இருந்தது.
சென்னை தோற்றுவிடும் என்று நினைத்து அனைவரும் மூட்டை கட்டிய நிலையில், ஆட்டத்தின் போக்கு மாறியது. அதிரடி வீரர் டுவைன் பிராவோ, மும்பை அணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினார். 18ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார். அதேபோல் 19ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 20 ரன்கள் எடுத்தார்.
கடைசி 7 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பிராவோ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பிராவோ 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கடைசி விக்கெட்டாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய கேதர் ஜாதவ் காயத்துடனே களத்திற்குள் நுழைந்தார்.
முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், 4ஆவது பந்தில் ஸார்ட் ஃபைன் லெக்கில் சிக்ஸர் அடித்தார். இதனால், கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்து பரபரப்புக்கு முடிவுகட்டப்பட்டது.
இதனால், பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் மயங்க் மார்கண்டே, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டுவைன் பிராவோ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com