11 ரன்களில் 4 விக்கெட்டுகள் சாய்ந்தன... இந்தியா 244 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் இன்று ஆட்டம் தொடங்கியதும் இந்தியா மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் 11 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது. இதையடுத்து 244 ரன்களில் இந்தியா முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் இந்தியா பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்கத்திலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷாவும், மாயங்க் அகர்வாலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் பூஜாராவும், கேப்டன் விராட் கோஹ்லியும் சிறப்பாக விளையாடினர். பூஜாரா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்து சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் ரஹானேவின் தவறால் 74 ரன்களில் ரன் அவுட்டானார். இதன்பிறகு யாரும் இந்திய அணியில் சிறப்பாக ஆடவில்லை. ரஹானே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வினும், விருத்திமான் சாஹாவும் களத்தில் இருந்தனர்.

இன்று ஆட்டம் தொடங்கியதும் இவர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு வந்த உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இன்று 11 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியாவின் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சாய்ந்தன. இறுதியில் இந்தியா 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. பும்ராவின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அவரது அனல்பறக்கும் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான மேத்யூ வேடும், ஜோ பர்ன்சும் தடுமாறினர். இவர்கள் 2 பேரையும் பும்ரா தான் ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. களத்தில் மார்னஸ் லபுஷேனும், ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளனர்.

More News >>