ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கால் உச்சநீதிமன்றத்தின் நேர்மையில் சந்தேகம் - நீதிபதி அதிரடி

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட சிலவற்றால் உச்சநீதிமன்றத்தின் நேர்மையில் சந்தேகம் எழுகிறது என்று நீதிபதி செலமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும், தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, சக மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகெய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய 4 நீதிபதிகள் பகிரங்கமாக போர்கொடி தூக்கினர். நீதிபதிக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், “உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இப்படியே போனால் இந்திய ஜனநாயகம் நிலைக்காது” என்றும் அதிரடியாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அந்த நால்வர்களுல் ஒருவரான மூத்த நீதிபதி .செலமேஸ்வர், ‘ஹார்வர்டு கிளப் ஆப் இந்தியா’ ஏற்பாடு செய்திருந்த ''ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு'' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “என்னுடைய கேள்வி என்னவென்றால், சில முக்கியமான வழக்குகளை எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்கின்றனர். நான் 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்துள்ளேன். எங்கள் நீதித்துறையின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுந்த வகையில் ஒரு தீர்ப்பைக் கூட என்னால் எழுத முடியவில்லை.

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் முறை, பொதுமக்களால் நம்பிக்கை இழக்கச் செய்கிறது என்று நம்புகிறேன். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

எனக்கு இளையவர்கள், மூத்தவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், வழக்குகள் ஒதுக்கப்படும் முறையில் தான் சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகே அந்த அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு என்ன பயன் தரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>