தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடக்குமா? அமைச்சர் பதில்
தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 376 பிரைமரி பள்ளி களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இன்று இதில் கலந்துகொண்ட தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ம் தேதி முதல் 7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்படும், ஜனவரி 10 தேதிக்குள் 7500 பள்ளிகளில் பயிற்சியாளருடன் கூடிய அறிவியல் ஆய்வு கூடம் துவங்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும்.
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். ஜனவரி 15 தேதிக்குள் அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும், அரசு பள்ளிகளில் 6 முதல் 8வரை கல்வி பயில கூடிய மாணவ மாணவியர்களுக்கு 3 லட்சம் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைன் மூலம் சரிவர வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு கல்வி பாடங்களை தாங்களே படித்துக் கொள்ள வேண்டும் என கூறுவதாக புகார்கள் வருகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் கல்வித் துறைக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதில் 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஒவ்வொரு துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்விக்காக இந்த ஆண்டு 34ஆயிரத்து 183 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்கி கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவன் 152 மதிப்பெண் பெற்றாலே மருத்துவராக வரலாம் என்ற வரலாறு தமிழ்நாட்டில் படைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து தேதி குறிப்பிட்ட இயலாது. முதல்வர் கூட பள்ளியை திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார் என்றார்.