உங்களிடம் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தால் ஆபத்து மத்திய அரசு நடவடிக்கை
ஒருவரிடம் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தால் உடனடியாக அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை ஒருவரிடம் ஒரு செல்போனும், ஒரு சிம் கார்டும் இருந்தாலே பெரிய விஷயமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல, ஒருவரின் பெயரில் ஏகப்பட்ட செல்போன்களும், பல சிம் கார்டுகளும் இருக்கிறது.
மத்திய அரசு சட்டத்தின் படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக 9 சிம்கார்டுகள் மட்டுமே பெறமுடியும். ஆனால் இதை மீறி பலர் ஏராளமான சிம் கார்டுகளை வாங்கி வைத்திருப்பது மத்திய தொலைத் தொடர்புத் துறைக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சிம் கார்டுகள் மூலம் சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிம் கார்டுகள் வாங்கி வைப்பதற்கு கட்டுப்பாடு கொண்டுவர மத்திய தொலைத் தொடர்புத் துறை தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக மத்திய தொலைத் தொடர்புத்துறை சார்பில் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உங்களிடம் இருந்தால் உடனடியாக அதைச் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு ஒரு செல்போன் நிறுவனத்தின் எத்தனை சிம் கார்டுகள் இருக்கிறது என்ற கணக்கு மட்டுமே அந்தந்த செல்போன் நிறுவனங்களிடம் இருக்கும். ஆனால் தொலைத் தொடர்புத் துறையின் கைவசம் ஒருவர் வைத்திருக்கும் சிம்கார்டுகள் குறித்த முழு விவரங்களும் இருக்கும். நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சிம் கார்டுகள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.