நாட்கள் கம்மி... நாளையே தொடங்குகிறேன்... பிரச்சாரத்தை அறிவித்த இபிஎஸ்!
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதேபோல் ஸ்டாலினும் முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் ஆளும் கட்சித் தரப்பில் பிரச்சாரம் தொடர்பான அறிகுறி இல்லாமல் இருந்தது.
சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நாட்கள் குறைவாக இருக்கின்றன. அந்தக் காரணத்தால் தேர்தல் பிரச்சாரத்தை நாளை எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்க இருக்கிறேன்'' என்று அறிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் விரைவில் பிரச்சாரம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.