விரைவில் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பில் புதிய வசதி
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. டெஸ்க்டாப் என்னும் மேசை கணினி பயன்படுத்துவோர், ஸ்மார்ட்போன் பயனர்களைப் போன்றே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க முடியும். சில 'பீட்டா' (Beta) பயனர்களுக்கு சோதனை முயற்சியாக இவ்வசதி கிடைக்கிறது.
இவற்றுக்கான பொத்தான்களில் 'பீட்டா' என்று குறியீடு உள்ளதாக கூறப்படுகிறது. கணினி மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டாலும் டெஸ்க்டாக் செயலியில் இணைப்புக்காக ஸ்மார்ட்போன் அவசியம். ஸ்மார்ட்போன் இல்லாமல் கணினியில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நண்பர்கள், குடும்பத்தினருடன் வீடியோ பகிர்ந்துகொள்வதற்கு முன்பு அல்லது நிலைத்தகவலாக (status) வைப்பதற்கு முன்பு அதை ஒலியில்லா வடிவுக்கு (mute) மாற்றுவதற்கான வசதியை வழங்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. அட்வான்ஸ்ட் வால்பேப்பர் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அரட்டைக்கும் (chat) வெவ்வேறு வால்பேப்பர்களை பயன்படுத்த முடியும்.