3 ஐ.பி.எஸ் மாற்றம்.. மத்திய அரசுக்கு எதிர்ப்பு.. மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு..
மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. இதற்கிடையே, இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்குச் சென்ற போது டயமன்ட் துறைமுகம் அருகே அவர் கார் மீது கல்வீச்சு நடைபெற்றது. திரிணாமுல் கட்சியினர்தான் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த சம்பவம் பாஜகவினர் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி, அது பற்றி விசாரிப்பதற்காக மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாநில அதிகாரங்களை பறிக்கும் செயல் என்று தலைமைச் செயலாளரையும், டிஜிபியையும் அனுப்ப மறுத்தார்.அதன் பின்னர், மேற்கு வங்க ஏடிஜிபி ராஜீவ் மிஸ்ரா, டி.ஐ.ஜி பிரவீன் திரிபாதி, டயமன்ட் துறைமுகம் பகுதி எஸ்.பி. போலாநாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து விட்டார். மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு ஊடுருவ முயற்சிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று(டிச.19) வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:மேற்கு வங்கத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.டெல்லியில் உள்ள மத்திய அரசானது, தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது. பிரதமர் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.