மம்தாவுடன் கடும் மோதல்.. மேற்கு வங்கத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம்..
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்கத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். மேலும், ஆளும் திரிணாமுல் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்களை பாஜகவில் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையே, இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்குச் சென்ற போது அவர் கார் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை சம்மன் அனுப்பியது. 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை.
இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று(டிச.19) காலை மேற்கு வங்கத்திற்குச் சென்றார். அங்கு அவர் முதலில் விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்களால் கவரப்பட்ட விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.அதன்பிறகு, அவர் மிட்னாப்பூர் சென்றார். அங்கு பாஸ்சிம் கிராமத்திற்குச் சென்று சுதந்திரப் போராட்டத் தியாகி குடிராம் போஸ் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். (பகத்சிங்கை போல் சிறிய வயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து போராடித் தூக்கிலிடப்பட்டவர் குடிராம் போஸ்).
பின்னர் அவரது வாரிசுகளுக்குச் சால்வை போர்த்திக் கவுரவித்தார். தொடர்ந்து இன்று மிட்னாப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அப்போது திரிணாமுல் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலரும் பாஜகவில் இணையவுள்ளனர். நாளை அவர் போல்பூர் சென்று அங்கு நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.