தென் ஆப்பிரிக்கா அணியின் 88 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்திய அணி!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை முடித்துக் கொண்ட கையோடு, கடந்த 17 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியானது அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாகத் தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் முதல் பந்திலேயே கோட்டை விடும் ப்ரித்வி ஷா இந்த முறையும் முதல் இன்னிங்சின் இரண்டாம் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
இரண்டாவது இன்னிங்ஸிலாவது விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் 4 ரன்களில் போல்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் கோலியை ரன் அவுட்டாக்கி, ஆஸ்திரேலியா அணிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த துணை கேப்டன் ரகானே, இரண்டாவது இன்னிங்ஸில் முட்டை வாங்கி கொண்டு பெவிலியன் திரும்பி அசத்தினார்.
முதல் போட்டி முடிந்தவுடன் மூட்டை கட்ட வேண்டிய கேப்டன் கோலியும், மூன்று நாட்களில் ஆட்டத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பத் தயாராகி உள்ளார். இப்படியாக அனைவரும் உள்ளூர் போட்டியைப் போல விளையாட முதல் இன்னிங்சில் 244 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. எனினும் முதல் இன்னிங்சில் தரமாகப் பந்து வீசிய நம்ம புள்ளைங்கோ ஆஸ்திரேலியா அணியை 191 ரன்களில் சுருட்டி கெத்து காட்டினார்.
53 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடிவாங்க ஆரம்பித்தது. வெறும் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கம்மின்ஸ் (4) மற்றும் ஹேசல்வுட் (5) விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி 90 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது. 21.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து முதல் வெற்றியை மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணியிடம் இருந்து பறித்துக் கொண்டது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்ச ரன்கள் எடுத்த அணிகளில் தென் ஆப்ரிக்கா அணி 1932 ல் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் 36 ரன்களை எடுத்து இருந்தது. இந்த மோசமான சாதனையை 88 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி தலைமையிலான அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.