ஹர்திக் படேல் மீது இங்க் வீச்சு!
குஜராத்தின் படேல் சமூக தலைவரான ஹர்திக் படேல் மீது இங்க் வீசப்பட்டுள்ளது.
குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர், `படேல் சமூக மக்கள், மாநிலத்தின் பல துறைகளில் பின் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, இட ஒதுக்கீட்டின் பொதுப் பிரிவில் இருக்கும் எங்கள் சமூகத்தில் மாறுதல் வேண்டும். எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று மாநில அரசுக்கு பகிரங்கமாக அறிவித்தார் ஹர்திக் படேல்.
ஒரு இளைஞரான ஹர்திக் இதைப்போன்று சொல்லியதை குஜராத்தில் அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த பாஜக அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதையடுத்து,`எங்கள் கோரிக்கை செயல்படுத்தாத நிலையில், மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும்’ என்று மிரட்டல் விடுத்தார் ஹர்திக்.
பாஜக சற்று அதிர்ந்தது. படேல் வகுப்பின் பெரும்பான்மையினர் ஹர்திக்கின் பின்னால் அணி திரண்டனர். சொன்னபடியே, படேல் சமூகத்தினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். பிரச்னையை அப்போது ஆறப்போட, ஹர்திக்கை கைது செய்து பல மாதங்கள் சிறையில் வைத்தது பாஜக.
இதற்கு பின்னர், ஹர்திக்கின் ஒரே இலக்கு, பாஜக-வை ஆட்சி நாற்காலியில் இருந்து கீழே இறக்குவதாகத்தான் இருந்தது. சென்ற ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது, ஹர்திக், பாஜக-வுக்கு எதிராக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். இந்நிலையில், ஹர்திக், மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது ஒரு மர்ம நபர் அவர் மீது இன்க் வீசினார். அந்த மர்ம நபரை ஹர்திக்கின் உடனிருந்தவர்கள் உடனடியாக மடக்கிப் பிடித்தனர்.
பிறகு அவரை போலீஸில் ஒப்படைத்தனர். அவரை விசாரித்த போது, `ஹர்திக், படேல் சமூகத்தை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். எனவேதான் அவர் மீது இங்க் அடித்தேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com