இளம் நடிகையிடம் சில்மிஷம்... 2 வாலிபர்களின் போட்டோக்களை வெளியிட போலீசார் முடிவு
கொச்சியில் பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் வணிக வளாகத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களின் புகைப்படங்களை வெளியிட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணியில் உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் அன்னா பென். இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் பகத் பாசில் நடித்த கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின்னர் ஹெலன் கப்பேளா ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்தார். இந்த மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டுகளாக ஓடின. இதனால் இவர் மலையாள சினிமாவின் அதிர்ஷ்ட நாயகியாக மாறினார். தற்போது இவர் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது தங்கை மற்றும் தாயுடன் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். அப்போது அங்கு வைத்து 2 வாலிபர்கள் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதில் அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து மாயமானார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகை அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. ஆனால் இது குறித்து அறிந்த கொச்சி களமசேரி போலீசார் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இதையடுத்து சம்பவ நடந்த வணிக வளாகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். இதில் 2 வாலிபர்கள் அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது புகைப்படங்களை போலீசார் சேகரித்தனர். இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களது பெயர், விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதையடுத்து இருவரது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட போலீசார் தீர்மானித்துள்ளனர்.