சென்னை வரும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருமான வரி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசிக்க திட்டம்

நாளை மறுநாள் சென்னை வரும் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் வரும் 2021-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயலர் (பொது) உமேஷ் சின்கா தலைமையில், துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிஹார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.வத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தேர்தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் டிச.21ம் தேதி சென்னை வருகின்றனர்.

முதலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது பரிந்துரைகள், மனுக்களைப் பெறுகின்றனர். தொடர்ந்து, வருமானவரித் துறை பொறுப்பு அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.அதைத் தொடர்ந்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வு செய்கின்றனர்.மறுநாள் டிச.22-ம் தேதி காலை, தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர். தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.

தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். பின்னர், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டுச் செல்கின்றனர்.

More News >>