முதல்வர் நிவாரண நிதிக்கு10 கோடி குருவாயூர் கோவிலுக்கு திருப்பிக் கொடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டத்தை மீறி முதல்வர் நிவாரண நிதிக்குப் பெற்ற ₹ 10 கோடி பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் தேவசம் போர்டுகளின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்பட ஆயிரக்கணக்கான கோவில்கள் கேரளாவில் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
தேவசம் போர்டுகள் தான் கோவில் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த சொத்துக்களை விற்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் கோவில் பணத்தை கோவில் செலவுக்கு மட்டுமல்லாமல் வேறு வகையில் செலவு செய்யவும் முடியாது. இந்நிலையில் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது குருவாயூர் தேவசம் போர்டு சார்பில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 5 கோடி கொடுக்கப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு மேலும் ₹ 5 கோடி கொடுக்கப்பட்டது.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை எதிர்த்து இந்து ஐக்கிய வேதி, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஹரி பிரசாத் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குருவாயூர் தேவசம் போர்டுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே தேவசம் போர்டுக்கு உள்ளது என்றும், அதை விற்கவோ, வேறு யாருக்கும் கொடுக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். தேவசம் போர்டின் சட்டத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீற அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் பணத்தை கோவில் பராமரிப்பு மற்றும் பக்தர்கள் நன்மைக்காக மட்டுமே செலவிட வேண்டும். எனவே குருவாயூர் கோவிலில் இருந்து அரசு பெற்ற 10 கோடியை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.