கேரளாவை மிரட்டும் அடுத்த நோய்... ஒருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 3 வருடங்களுக்கு முன் கோழிக்கோடு மாவட்டத்தில் நிப்பா என்ற வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரள சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையின் காரணமாக இந்த நோய் பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் போது கேரளாவில் இந்நோய் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சராசரியாக 27 பேர் தினமும் மரணமடைகின்றனர். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது.

இதையடுத்து கொரோனாமேலும் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஷிகெல்லா என்ற ஒரு நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடுமையான காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை தான் இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். மோசமான தண்ணீர் மற்றும் உணவு சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பரவுவதாகத் தெரிந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்நோய் பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நோய் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் ஷிகெல்லா நோய் வேகமாகப் பரவுவது கோழிக்கோடு பகுதியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>