டெஸ்ட் போட்டியின் அழகே அதுதான்.. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்து சொன்ன சச்சின்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. வெறும் 36 ரன்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். இன்றைய தினத்தை இந்திய கிரிக்கெட்டின் ஒரு கருப்பு நாளாகக் கூட கருதலாம். ஏனென்றால் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா ஆடிய ஆட்டம் அவ்வளவு மோசமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை. இன்றைய போட்டியில் இந்தியா எடுத்த 36 ரன்கள் தான் இதுவரை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிக குறைந்த ஸ்கோர் ஆகும்.
கடந்த 46 வருடங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா எடுத்த 46 ரன்கள் தான் இதுவரை மிகக்குறைந்த ஸ்கோர் ஆக இருந்தது.இந்தியாவின் இன்றைய மோசமான ஆட்டத்திற்கு வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் உள்பட பல முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணியை வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ளவர், ``முதல் இன்னிங்ஸில் இருந்ததைவிட இன்று காலை ஆஸ்திரேலிய அணி போராடி மீண்டுவிட்டது. இதுதான் டெஸ்ட் போட்டியின் அழகே. டெஸ்ட்டை பொறுத்தவரை போட்டி முடியும் வரை எதுவும் முடிந்து விட போவதில்லை. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.