அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,153 பேருக்கு மட்டுமே நோய் பரவியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இதற்கிடையே இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது.

நோயாளிகள் எண்ணிக்கையைப் பொருத்தவரை தற்போது இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நோய் பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதற்கிடையே இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நோய் பரவல் வேகமாகக் குறைந்து வருகின்ற போதிலும் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இன்று 6,293 பேருக்கு நோய் பரவியுள்ளது. இந்தியாவிலேயே இன்று கேரளாவில் தான் மிக அதிக பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் முக்கிய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது: இந்தியாவில் இன்னும் கொரோனா ஆபத்து குறையவில்லை. எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்திற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் நோய் பரவல் 2 சதவீதமாகக் குறைந்து விட்டது. மரண சதவீதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிகவும் குறைந்துள்ளது. நோய் குணமடைவது 95.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. சிறப்பான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>