மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம்.. மதம் மாற மறுத்ததால் வாலிபர், தாய் மீது தாக்குதல்

மாற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மதம் மாற மறுத்ததால், பெண்ணின் உறவினர்கள் வாலிபரையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள தோப்பும்படி பகுதியை சேர்ந்தவர் முருகன் (56). இவரது மனைவி லேகா (48) இவர்களது மகன் அபிஜித் (27). இவர் அங்குள்ள பெரும்பாவூர் என்ற இடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அபிஜித்துக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். திருமணம் செய்யவும் அவர்கள் தீர்மானித்தனர். ஆனால் திருமணத்திற்கு அபிஜித்தின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த போதிலும் அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

அபிஜித்தை திருமணம் செய்வதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுடைய மதத்திற்கு மாறுவதாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிக்க முடியும் என்று அவர்கள் கூறினர். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். அதன்படி கொச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அபிஜித்தின் பெற்றோர் வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இதற்கிடையே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல பலமுறை அவரது உறவினர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் தனது வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் கடந்த வருடம் அந்தப் பெண்ணின் வீட்டார் அவரை கட்டாயமாக அழைத்து சென்று விட்டனர். பின்னர் அவரை மலப்புரம் என்ற இடத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சிறை வைத்தனர். இது குறித்து அபிஜித் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அந்தப் பெண்ணின் உறவினர்கள் அபிஜித்தின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் அபிஜித்தும், அவரது தாயும் மட்டுமே இருந்தனர். அபிஜித் தங்களுடைய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உறவினரான இஜாஸ் அகமது என்பவரை கைது செய்தனர். காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆலுவா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News >>