பொங்கல் பரிசை ஸ்டாலின் விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் : எடப்பாடி பழனிச்சாமி சாடல்
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியசோரகை, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, சவுரியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பெரியசோரகை, இருப்பாளி, எட்டிகுட்டை மேடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இரவு எட்டிகுட்டைமேடு பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களிலிலேயே மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
இதன் மூலம் மருத்துவ வசதியை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்வியில் சேர முடிந்தது. தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு 313 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவித்திருப்பது சுயநலம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொரோனா பாதிப்பு, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதை தவறு என்று கூறுவது சரியல்ல.
ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் எந்த காலத்திலும் வென்றதாக சரித்திரம் கிடையாது. கிராமத்தில் பிறந்து ஏழை மக்களோடு பழகியவன் என்பதால் தைப்பொங்கலை ஏழை மக்கள் எவ்வாறு சிரமப்பட்டு கொண்டாடுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவ்வாறு சிரமப்படும் ஏழை மக்களும் மற்றவர்களைப் போல தை பொங்கலை கொண்டாட வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணம் ஆகும். இதனை தடுக்க நினைப்பது நியாயம் தானா என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஸ்டாலின் தற்போது சுயநலம் என்று விமர்சிப்பது சந்தர்ப்பவாதமும் ஆகும்.
பச்சோந்தியும் கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறம் மாறும், ஆனால் நொடி பொழுதில் நிறம் மாறி ஸ்டாலின் மாறி மாறி பேசி வருகிறார். இதே போன்று அவருடைய தந்தை கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார். ஆனால் யாருக்கும் நிலம் கொடுக்க வில்லை. பச்சை பொய் கூறுவதையே திமுக தேர்தல் காலங்களில் வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை பொது மக்களுக்கு அளித்த அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். உழைப்பவர் தான் வெற்றி பெற முடியும் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். எங்களை தமிழக மக்கள் வெற்றிபெற வைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.