குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கொரொனா தொற்று காரணமாக குற்றாலத்தில் கடந்த எட்டரை மாதங்களாக அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் அருவியில் பொதுமக்கள் நீராட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் தென்காசி வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் மெயினருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

More News >>