கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
கொரோனாவுக்கு 2 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொடக்கத்தில் மிக அதிக அளவில் நோய் பரவல் இருந்த மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,624 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக கேரளாவில் நோய் பரவலின் வேகம் அதிக அளவில் உள்ளது. தினமும் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. நேற்று 6,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் நோய் பாதித்து மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 28க்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர். இதற்கிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியது: இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், பூனாவிலுள்ள சிரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இதற்கான அனுமதி வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் மிக விரைவில் தடுப்பூசி கொடுக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.