கோவில் ஆச்சாரத்தை மீறியதால் பெரும் சோதனை வெள்ளியில் ஹெலிகாப்டர் சமர்ப்பித்த அரசியல் தலைவர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் டி.கே. சிவகுமார். இவர் கர்நாடக மாநிலத்தில் பங்காரப்பா அமைச்சரவையில் சிறை மற்றும் ஊர்க்காவல் துறை அமைச்சராகவும், எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், சித்தராமையா அமைச்சரவையில் மின்துறை அமைச்சராகவும், கடந்த குமாரசுவாமி அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சிவகுமாரின் பெங்களூருவில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதன் பின்னர் கடந்த வருடம் மத்திய அமலாக்கத் துறையும் அவரது வீட்டில் சோதனை நடத்தியது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பின்னர் தான் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் இவரது வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இவர் 75 கோடிக்கும் மேல் வருமானம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை கூறியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிவகுமார் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள மைலரா லிங்கேஸ்வரா கோவிலில் தரிசிக்க சென்றார்.
அப்போது அவர் வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு ஹெலிகாப்டரை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார். இதன் பின்னர் சிவகுமார் கூறியது: இந்த கோவிலின் ஆச்சாரத்தை தெரியாமல் நான் மீறி விட்டேன். கடந்த முறை கோவிலில் திருவிழா நடந்தபோது நான் ஹெலிகாப்டரில் வந்தேன். கோவில் வழக்கப்படி திருவிழா நேரத்தில் கால்நடையாகத் தான் பக்தர்கள் செல்ல வேண்டும். ஆனால் நான் ஹெலிகாப்டரில் கோவில் மீது பறந்து சென்று இறங்கினேன். இது தவறு என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன். கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் என் வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்க துறை சோதனை நடத்தது. இதற்கு பிராயச்சித்தமாகத் தான் நான் வெள்ளியில் செய்த ஹெலிகாப்டரை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினேன் என்று கூறினார்.