இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எங்குமே பார்த்ததில்லை கொல்கத்தா பேரணியில் அமித்ஷா
இவ்வளவு பெரிய ஆள் கூட்டத்தை நான் வேறு எங்குமே பார்த்ததில்லை என்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை மம்தா பானர்ஜியிடமிருந்து இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இதற்காக அமித்ஷா உள்பட பாஜகவை சேர்ந்த அனைத்து முக்கிய தலைவர்களும் மேற்குவங்க மாநிலத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கொல்கத்தா சென்றார். கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்பி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். ஏற்கனவே திரிணாமுல் கட்சியில் இருந்து ஏராளமானோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் பாஜகவின் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் அமித்ஷா பேசியது: நான் இதுவரை ஒரு பேரணியில் இவ்வளவு பெரிய கூட்டத்தை இதுவரை பார்த்ததில்லை. இது பிரதமர் நரேந்திர மோடி மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு இருக்கிற வெறுப்பையும் இதில் நான் பார்க்க முடிகிறது. ஒருமுறை மோடிக்கு நீங்கள் ஆதரவு அளியுங்கள், அடுத்த ஐந்து வருடம் மேற்கு வங்காளத்தை நோக்கி பொன்னான வாய்ப்புகள் தேடி வரும் என்று பேசினார்.