பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுக கொள்கை மாறாது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவின் கொள்கை மாறாது என்பதை முதலமைச்சர் பழனிசாமி, கிறிஸ்துமஸ் விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக கொண்டு வந்த நேரம் என்பதால், மோடி அரசுக்குச் சிறுபான்மையினரிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், அந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தது. இதன்பின்னர், சிறுபான்மையினர் தங்களுக்கு எதிரானதாகக் கருதும் சி.ஏ.ஏ சட்டம், என்.ஆர்.சி போன்றவற்றை மோடி அரசு கொண்டு வந்தது. இதனால் சிறுபான்மையினரிடம் மோடி அரசு மீதான எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதனால், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேரக் கூடாது என்று அதிமுகவில் பலரும் குரல் எழுப்பினர். ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில், பாஜகவுடன்தான் கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து விட்டனர். இதைத் தொடர்ந்து, சிறுபான்மையினரின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக முதல்வர் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் போன்றவற்றுக்குச் சென்று வழிபட்டார். இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் நேற்று(டிச.20) கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே கிறிஸ்தவ மக்களின் நலனில் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தார். கிறிஸ்தவ மக்கள் ஜெருசேலம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அவர்தான் கொண்டு வந்தார். இப்போது அந்த உதவித் தொகை ரூ.20 ஆயிரமாக இருக்கிறது. இதை ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.நாங்கள் எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கைப்படிதான் அந்த கட்சி செயல்படும். அதே போல், அதிமுகவும் கொள்கையை விட்டுக் கொடுக்காது. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. சிறுபான்மை மக்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அதிமுக இருக்கும். கூட்டணிக்காக(பாஜக) எந்த நேரத்திலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.இவ்வாறு பழனிசாமி பேசினார். விழாவில் தமிழக ஆயர் பேரவை செயலாளரும், திண்டுக்கல் மறை மாவட்ட பேராயருமான தாமஸ்பால்சாமி உள்படப் பலர் பங்கேற்றனர்.

More News >>