நடிகையிடம் சில்மிஷம் வாலிபர்கள் பிடிபட்டனர் மன்னிப்பு கொடுத்தார் நடிகை
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்குச் சென்றபோது அவரிடம் 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து நடிகை அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின்னர் தான் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிய போதிலும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடிகையின் தாயிடம் விசாரித்த போலீசார் அவரிடமிருந்து ஒரு புகாரையும் பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்தனர். அதில் இரண்டு வாலிபர்கள் அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கினர்.தொடர்ந்து இருவரது புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர். முதலில் இருவரது பெயர், முகவரி உட்பட எந்த விவரங்களும் போலீசுக்குக் கிடைக்கவில்லை. புகைப்படங்கள் வெளியான பின்னர் தான் அவர்கள் இருவரது பெயர் விவரங்கள் தெரியவந்தன. மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவர்களில் ஒருவரது பெயர் முகம்மது ஆதில் (24) என்றும், இன்னொருவரின் பெயர் இர்ஷாத் (24) என்றும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாக இருந்ததால் போலீசாரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இருவரும் சில மலையாள டிவிக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், வேண்டுமென்றே தாங்கள் நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறினர். இந்த சம்பவம் வெளியானதால் தங்களது வீட்டினரும், ஊர்மக்களும் கேவலமாக பேசுவார்கள் என தெரியும்.
மேலும் போலீசார் எங்களை தேடி வருவதால் இது குறித்து ஒரு வக்கீலிடம் தொடர்புகொண்டு விவரத்தை கூறினோம். அவர் தான் தலைமறைவாக இருக்குமாறு கூறினார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறவும் நாங்கள் தீர்மானித்திருந்தோம். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் நாங்கள் போலீசில் சரணடையத் தீர்மானித்துள்ளோம். விரைவில் போலீசில் சரணடைவோம் என்று கூறினர்.இதன்படி நேற்று இரவு இருவரும் கொச்சி போலீசில் சரணடையச் செல்லும் வழியில் போலீசார் அவர்களை பிடித்தனர். இதற்கிடையே இருவரது வேண்டுகோளையும் ஏற்று அவர்களை மன்னிப்பதாக நடிகை அன்னா பென் நேற்று இரவு 11 மணியளவில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
இனி இதுபோன்ற ஒரு சம்பவம் வேறு யாருக்கும் நடைபெறக் கூடாது. என்னுடைய குடும்பத்தைப் போலவே அவர்கள் இருவரது குடும்பங்களும் வேதனைப்படுவதால் அவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க தீர்மானித்துள்ளேன் என்று குறிப்பிட்டார். இதற்கிடையே இர்ஷாத் மற்றும் ஆதில் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். ஆனால் நடிகை தரப்பில் புகாரை வாபஸ் பெற்றால் இருவரையும் போலீசார் விடுவித்து விடுவார்கள் எனக் கருதப்படுகிறது.