இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் மத்திய அரசு அவசர ஆலோசனை
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை நிறுத்த தீர்மானித்துள்ளது. மத்திய அரசும் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாக காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இந்நோய்க்கு 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதேபோல பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட நாடுகளிலும் பலி எண்ணிக்கை மிக அதிகமாகும். இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார். முதலில் பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் இந்த புதிய பரவி வருகிறது. இதையடுத்து லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பல பகுதிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் லாக் டவுன் அறிவித்துள்ளார். லண்டனில் நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் மக்கள் தங்களது பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தில் புதிய வைரஸ் பரவுவதை தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி சவுதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க தீர்மானித்து உள்ளது. சவுதி அரேபியா தன்னுடைய அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அரசு இன்று சுகாதாரத் துறையின் அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. இதில் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்துவது உட்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.