ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார் மத்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறுகிறார்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்திய நிலையில், அதை நிறைவேற்றத் தயார் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா கூறியுள்ளார்.இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த மாதம் பிரதமர் மோடி கூறினார். அவர் கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலும் எல்லா மாதத்திலும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்து உள்ளது.எனவே ஒரே ஒரு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்தினால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.
இது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று கூறினார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் பிரதமர் மோடி இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.கடந்த 2018ல் சட்ட ஆணையத்தின் ஒரு வரைவு அறிக்கையில், நாடாளுமன்றம், சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த வேண்டும் எனச் சிபாரிசு செய்திருந்தது. ஆனால் காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று அப்போது அக்கட்சிகள் கூறின. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவர இந்தியத் தேர்தல் ஆணையம் தயார் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்குத் தேவையான சட்டத் திருத்தத்திற்குப் பின்னர் ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை நிறைவேற்றத் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றார். இந்தியாவில் தேர்தல்களை நடத்த வேண்டிய முழுப்பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்குத் தான் உள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.