இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் விமானப் போக்குவரத்தை நிறுத்தியது இந்தியா
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. மேலும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா பீதியை மேலும் குறைத்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவி வருவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக லண்டன் உள்பட சில பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதையடுத்து லண்டன் உட்பட சில பகுதிகளில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும், பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இந்த வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் எந்த அளவுக்கு மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் பல்வேறு நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்படப் பல நாடுகள் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துவிட்டது. சவுதி அரேபியா தன்னுடைய அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் சுகாதாரத் துறையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்து அனைத்தையும் நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது. நாளை லண்டனில் இருந்து இந்தியா வரும் விமானத்தில் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.