அதிமுக பொதுக்குழு ஜன.9ம் தேதி கூடுகிறது.. கட்சி விதிகளில் மாற்றமா?

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடி, சசிகலாவை பொதுச் செயலாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது. அதற்குப் பின்னர், பாஜகவைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதால், ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஒரு நாள் ராத்திரியில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தர்மயுத்தம் தொடங்கினார். இதற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.

சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார்.எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என்று அதிமுக சில மாதங்களை ஓட்டியது. மீண்டும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி, இரு அணிகளும் கைகோர்த்தன. (பிரதமர் சொன்னதால் தான், எடப்பாடிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் பதவியேற்க ஒப்புக் கொண்டேன் என்று பின்னாளில் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாகப் பதிவு செய்திருக்கிறார்) அப்போதிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், எடப்பாடியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கைகளைப் பிடித்துச் சேர்த்து வைத்தார்.

அதற்குப் பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். அத்துடன், அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவியே நீக்கப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. சட்ட திட்ட விதி எண் 43-ல் திருத்தம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அளிக்கப்பட்டது.இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடைசியில், ஓ.பி.எஸ் சமரசமாகி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும், இரு தரப்பிலும் ஆதரவாளர்கள் தனித்தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.தற்போது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ஜன.9ம் தேதி காலை 8.50 மணிக்கு(9 மணிக்கு ராகுகாலம் தொடக்கம்) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்துப் பேசப்படவுள்ளது. மேலும், தேவைக்கேற்ப சில விதிகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

More News >>