கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு 10, 12ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்லலாம்

கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூன் முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டது. ஆன்லைனிலேயே காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி மார்ச் 17 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குச் சந்தேகம் ஏதும் இருந்தால் ஜனவரி 1ம் தேதி முதல் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில் கேரளாவில் கல்லூரிகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கும் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. சுழற்சி அடிப்படையில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று கேரள உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

More News >>