36 ஆயிரம் பாதிப்பு.. 300 உயிரிழப்பு.. இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்!
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. மேலும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா பீதியை மேலும் குறைத்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவி வருவதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக லண்டன் உள்பட சில பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதையடுத்து லண்டன் உட்பட சில பகுதிகளில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும், பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் எந்த அளவுக்கு வீரியமாக பரவி இருக்கிறது என்றால், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பாதிப்பு பாதிக்கும் குறைவாகதான் இருந்தது. ஆனால் தற்போது புதிய வைரஸின் தாக்கத்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோக 300-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இங்கிலாந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.