பாஜக ஆட்சி சரியில்லை... உத்தராகண்ட்டில் கால்பதிக்கும் ஆம் ஆத்மி!
உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போது முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே, உத்தராகண்ட் மாநிலத்தில் 2022-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கூறுகையில், டெல்லியில் ஆம் ஆத்மி நல்லாட்சியை பார்த்து தங்கள் மாநிலத்திலும் நல்லாட்சி செய்ய வேண்டும் என உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சுகாதாரம், மின்சாரம், நீர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செய்து வருகிறது என்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார் என்றார். ஏற்கனவே, உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஆம் ஆம்தி கட்சி எழுச்சி பெறுமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.