புகழேந்திக்கு அதிமுக தலைமை அட்வைஸ் பண்ண வேண்டும்: பா. ஜ.க. செயலாளர் காட்டம்
அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு கட்சித்தலைமை தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:அஇஅதிமுக வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை பா.ஜ.க தலைமை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அஇஅதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றளவும் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது என்றும், பா.ஜ.க - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவு படுத்திய பிறகும் அதிமுக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு புகழேந்தி போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை குறித்து பேசுவதற்கு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதிமுக வின் தலைமை இவர்களை போன்றவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.